ரயில்வே தேர்வில் தமிழக மாணவர் பின் தங்குவது ஏன்?- ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி விளக்கம்


பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரயில்வே துறையில் ஒருவர் பணியில் இருந்தாலே, அவரது வாரிசுகளுக்கும் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. தற்போது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலமே ரயில்வேயில் பணி வாய்ப்புகளை பெற முடியும்.

சமீபத்தில் ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய டிராக் மேன், கீ மேன் போன்ற குரூப் ‘டி’ பிரிவு பணியாளர்கள் தேர்வில் வடமாநில இளை ஞர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

85 சதவீதம் வடமாநிலத்தவர்

மதுரை கோட்டத்திலுள்ள குரூப்-டி பிரிவுக்கான மின் ஊழியர், சிக்னல் பராமரிப்பு, கேட் கீப்பர் போன்ற பணிகளுக்கு 2018 நவம்பர், டிசம்பரில் ஆன்லைன் தேர்வு நடந்தது. இதற்கான முடிவு வெளியானபோது, 624 பேரில் 85 சதவீதம் பேர் வடமாநில இளைஞர்கள். 10 சதவீதம் பேர் மட்டும் தமிழக இளைஞர்கள் தேர்வாகினர்.

திருச்சி கோட்டத்தில் 1,765 தொழில் பழகுநருக்கான காலியிடங்களை நிரப்பியபோது, அதில் 1,600 பேர் வடமாநில இளைஞர்கள் எனத் தெரிய வந்தது. ரயில்வே தேர்வுகள் அந்தந்த மாநில மொழியில் நடத்தப்பட்டாலும் தமிழக இளைஞர்களுக்கு ஆர்வக் குறைவால் தேர்ச்சி விகிதம் குறைவதாக தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி சங்கரநாராயணன் கூறியது: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரள மாநிலத்தவர் ரயில்வே தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐஐடி, பல் மருத்துவம் படித்தவர்களும் குரூப் டி பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழக இளைஞர்கள் குரூப் ‘ டி ’ தேர்வுகளில் அவ்வளவாக முனைப்புக் காட்டுவதில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு காட்டும் ஆர்வத்தை ரயில்வே தேர்வுகளில் காட்டுவதில்லை.

ஆன்லைனில் தேர்வுகளில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை. மத்திய அரசு பணிக்கென பிரத்யேக பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் துரைப்பாண்டி என்பவர் கூறுகையில், ‘‘ ரயில்வே குரூப் -டி தேர்வு பற்றி தமிழக மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இத்தேர்வுக்கு முறையாகத் தயாராகாமல் பங்கேற்பதால் வெற்றி பெறுவதில்லை. நானும் இத்தேர்வை எழுதினேன். தேர்வு மையங்களை தூரத் தில் ஒதுக்குவதாலும், தேர்வுக் கட்டணம் அதிகமாக இருப்பதாலும் ஆர்வம் குறை கிறது“ என்றார்.

பயிற்சி மையங்கள் தேவை

பாலமுருகன் என்பவர் கூறும்போது,‘‘ ரயில்வே போட்டித் தேர்வுக்கு தமிழகத்தில் பிரத்யேக பயிற்சி மையங்கள் இல்லை. வடமாநிலங்களில் இதற்கென ஏராளமான பயிற்சி மையங்கள் இருக்கின்றன. மேலும் அங்கு பள்ளிகளிலேயே போட்டித் தேர்வெழுத பயிற்சி அளிக்கின்றனர்’’ என்றார்.