மதுரை - உசிலம்பட்டி இடையே புத்தாண்டு முதல் ரயில் போக்குவரத்து துவங்க திட்டம்மதுரை - போடி இடையே முதற்கட்டமாக டிசம்பருக்குள் உசிலம்பட்டி வரை அகல ரயில் பாதை பணிகளை முடித்து புத்தாண்டு முதல் ரயில் போக்குவரத்து துவங்க ரயில்வே கட்டுமான பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை-போடி லைன் 90 கி.மீ., துாரத்தை அகல பாதையாக மாற்றும் பணி 2011ல் துவங்கியது. இதற்காக அந்தாண்டு ஜன., 1 முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிதி ஒதுக்கீடு மிகவும் சொற்பமாக இருந்ததால் பணிகளை விரைந்து மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. சில ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு கணிசமான நிதியை மத்திய அரசு ஒதுக்கியதால் பணிகள் தீவிரமடைந்தன
தற்போது இந்த வழித்தடத்தில் குன்னுார் வைகை பாலம் உள்ளிட்ட பெரிய பாலங்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உசிலம்பட்டி வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கற்களை செம்மைப்படுத்தும் பணி நடக்கிறது. மதுரை ஸ்டேஷனில் புதிய லைனை இணைத்து சிக்னல் பொருத்தும் பணியில் கட்டுமான பிரிவினர் தீவிரமாகவுள்ளனர்
ரயில்வே கட்டுமான பிரிவினர் கூறியதாவது: மதுரை-உசிலம்பட்டி, உசிலம்பட்டி-போடி என இரு கட்டங்களாக அகல ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இந்தாண்டு இறுதிக்குள் உசிலம்பட்டி வரை பணிகள் முடிக்கப்படும். புத்தாண்டில் உசிலம்பட்டி வரை ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. ஆண்டிப்பட்டி கணவாயில் மலைகளை குடைந்து அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் போடி வரையிலான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.