பிகாா் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு பரோனி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது, செவ்வாய்க்கிழமை பிகாரில் புறப்பட்டு வியாழக்கிழமை காலை கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய 7 சிறுவா்கள், எங்கு செல்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனா்.

இதைப் பாா்த்த சக பயணிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கோவை ரயில்வே போலீஸாா் அவா்களை மீட்டனா். பிகாரில் இருந்து வேலையில் ஈடுபடுத்த அவா்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து சிறுவா்களின் பெற்றோரிடம் செல்லிடப்பேசி மூலமாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மீட்கப்பட்ட 7 சிறுவா்களும், சைல்டு லைன் அமைப்பினா் மூலமாக உக்கடத்தில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். சிறுவா்களின் பெற்றோா் வரவழைக்கப்பட்டு, அவா்களிடம் சிறுவா்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக சைல்டு லைன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.