6 ரயில் நிலையங்களில் நுண் உர மையங்கள் - சேலம் ரயில்வே கோட்டம் தீவிரம்


சேலம் ரயில்வே கோட்டத்தில் முதன் முறையாக போத்தனுார், மேட்டுப்பாளையம் உட்பட 6 ரயில் நிலையங்களில், மக்கும் குப்பையை உரமாக்கும், நுண் உரம் செயலாக்க மையங்கள் அமைக்கும் பணி, இவ்வாண்டு இறுதிக்குள் துவங்கப்படுகிறது.
Image result for salem railway division

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை துாய்மைப்படுத்தப்படுவதுடன், பசுமை ரயில், பசுமை ஸ்டேஷனாக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உட்பட, 74 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஏ1 அந்தஸ்து பெற்ற கோவை ரயில் நிலையம் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, துாய்மை ஆகிய 3 தரச்சான்றுகளை தக்கவைத்துள்ளதுடன், பசுமை ஸ்டேஷனாக தரம் பெறவும் முனைப்பு காட்டிவருகிறது. மேலும் ஊக்குவிக்கும் விதமாக, போத்தனுார், மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் தலா, ரூ.35 - 40 லட்சம் மதிப்பில் உரமாக்கும் மையங்கள் நிறுவப்படவுள்ளன.

ரயில் நிலைய பரப்பளவு, சேகாரமாகும் குப்பை அளவுக்கு ஏற்ப தொட்டிகள் எண்ணிக்கை மற்றும் கட்டுமான மதிப்பீடு மாறுபடும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை கூறுகையில் "நுண் உர மையம் அமைக்கப்பட்டால், டன் கணக்கிலான கழிவுகள் குப்பை கிடங்குகளுக்கு செல்வது தவிர்க்கப்படும். தயாரிக்கப்படும் உரம் ஸ்டேஷன் தேவைகளுக்கும், தனியாருக்கும் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதல்படி, சேலம் கோட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உட்பட 6 ரயில் நிலையங்களில், நுண் உரம் செயலாக்க மையங்கள் அமைக்கப்படுகின்றன. வரும், டிசம்பர் மாதத்துக்குள், இதற்கான பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.