தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை, டில்லியில் இருந்து, உத்தர பிரதேச மாநிலம், லக்னோ வரை, வரும், 5ம் தேதி முதல் துவங்குகிறது. இதுபோல, பல்வேறு மாநிலங்களிலும், தேஜஸ் ரயில் சேவை, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நவீன வசதிகளை கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் வரையிலான, இலவச காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், பயண காலத்தில், பயணியரின் வீடுகளில், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், அதற்கு தனியாக, ஒரு லட்சம் ரூபாய் வரை, காப்பீடு வழங்கும் திட்டமும், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

டில்லியில் இருந்து லக்னோ செல்ல, இந்த ரயிலின் சாதாரண , 'ஏசி' பெட்டியில், 1,280 ரூபாயும், 'எக்சிக்யூட்டிவ்' பிரிவில், 2,450 ரூபாயும், கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ரயில்வே வரலாற்றில், முதல் முறையாக, ரயில் தாமதத்திற்கு, பயணியருக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை, .ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், அறிமுகப்படுத்தி உள்ளது. ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டால், பயணியருக்கு 100 ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், 250 ரூபாயும், இழப்பீடாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயிலில் பன்மடங்கு கட்டணம் உள்ளதால் ரயிலின் டைனமிக் முறை கட்டணம் அடிப்படை கட்டணத்தை விட 150% சதவிகிதம் அதிகமாகவே உள்ளது.

1 லட்சம் கிலோ, 'பிளாஸ்டிக்' குப்பை!

துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் மத்திய மற்றும் மேற்கு ரயில்வே நிர்வாகம், ரயில் நிலையங்களில், 'பிளாஸ்டிக்' குப்பையை அகற்றும் பணியை, கடந்த, 15 நாட்களாக, மேற்கொண்டு வந்தது. இதில், 1 லட்சம் கிலோ, பிளாஸ்டிக் குப்பை, அகற்றப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களில் குப்பை போட்ட, 3,926 பயணியரிடம், 7 லட்சத்து, 59 ஆயிரத்து, 780 ரூபாய், அபராதம் வசூலிக்கப்பட்டதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Related image