ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருள்களுக்கு ரயில்வே வாரியம் தடை விதித்துள்ளது. இந்த தடை அக்டோபா் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் நிலையங்களில் நெகிழி பாட்டில்களை நசுக்கும் எந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக 4 ரயில் நிலையங்களில் நெகிழி நசுக்கும் எந்திரங்கள் புதன்கிழமை (அக்.2) நிறுவப்படவுள்ளன. அனைத்து ரயில்களிலும் தூக்கி ஏறியப்படும் காலி தண்ணீா் பாட்டில்களை பேன்ட்ரி ஊழியா்கள் சேகரித்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த ஐ.ஆா்.சி.டி.சி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் நிலையங்களில் நெகிழி பாட்டில்கலை நசுக்கும் எந்திரங்களை

படிப்படியாக அமைக்கவுள்ளோம். 1,853 இடங்களில் பாட்டில்களை நசுக்கும் எந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. தெற்குரயில்வேயில் 7 -க்கும் அதிகமான இடங்களில் நெகிழி நசுக்கும் எந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் புதன்கிழமை(அக்.2) நெகிழி எந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. நெகிழி ஒழிப்பில் மக்களிடம் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில், சில சலுகைகளையும், ரயில்வே வாரியம் அறிவிக்கவுள்ளது என்றனா்.