பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ரயில்வே போலீசார் கூறியதாவது: பயணிகள், ஓடும் ரயிலில் ஏறவும், இறங்கவும் கூடாது. ரயில் பயணத்தின் போது கதவு அருகில் நின்றோ, படிக்கட்டில் அமர்ந்தோ பயணம் செய்யக் கூடாது. கதவு தள்ளி கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.பயணத்தின் போது, அறிமுகம் இல்லாத நபர்கள் தண்ணீர் மற்றும் திண்பண்டங்கள் கொடுத்தால், வாங்கி உட்கொள்ளக்கூடாது. பெண்கள் அதிக நகைகள் அணிந்து கொண்டு ஜன்னலோரம் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

ரயில் தண்டவாளம், ரயில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதி அருகே உள்ள மக்கள், ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது. தண்டவாளப் பாதையை கடக்க மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். மேம்பாலம் இல்லாத இடங்களில், தண்டவாளத்தை கடக்கும் போது இருபுறமும் ரயில் வருகிறதா என பார்த்து செல்ல வேண்டும்.செல்போன் பேசியபடி கவனமின்றி தண்டவாளத்தை கடக்க கூடாது. ரயில்வே கேட் மூடியிருக்கும் போது, கடப்பது சட்டப்படி குற்றமாகும். தண்டவாளப்பகுதியில் கற்களை வைப்பதும், ஓடும் ரயிலின் மீது கற்களை எறிவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரயில் பயணிகள் உதவி தேவைப்பட்டால், 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு பேசலாம். மேலும், 99625 00500 வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து மக்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.