முறையான வடிகால் வசதி இல்லாததால் மெட்ரோ ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கும் அவலம்: பயணிகள் அவதி

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ன்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை தினசரி 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பயணிகளின் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் முறையான வடிகால் வசதி செய்யாததால், கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர், வெளியேற வழியின்றி ரயில் நிலையத்தை சுற்றி தேங்கியுள்ளது. 

இதில் குப்பை சேர்ந்து சேறும் சகதியுமாக மாறியதுடன், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்ற இடங்களில் சுத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிறிய மழைக்கே இந்த நிலை என்றால், வடகிழக்கு பருவ மழை தொடங்கினால், ரயில் நிலையத்தினுள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றிலும் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, சுத்தமாக வைத்துகொள்ளவும், வடிகால் வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Dinakaran Daily news