ரயில்வேயில் முன்னாள் ராணுவத் தினரை ஒப்பந்த பணியாளர்களாக நியமிப்பதை நிறுத்திவிட்டு, நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டுமென டிஆர்இயு தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பொறியியல் துறையில் தண்டவாள பராமரிப்பாளர், இயக்கத் துறையில் பாயிண்ட்ஸ் மென், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் துறைகளில் களாசிகள் பணியிடங்களுக்கு 2,393 முன்னாள் ராணுவத்தினரை தெற்கு ரயில்வே தேர்வு செய்துள்ளது.

இவர்களது சான்றிதழ் சரி பார்க்கும் பணி செப்டம்பர் 20-ம் தேதி முதல் வரும் அக்டோபர் 16-ம் தேதி வரை சென்னை ரயில்வே தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்திய அளவில் ஒரு மண்டல ரயில்வே அதிக அளவில் இதுபோன்ற பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்வது இதுவே முதல்முறை.

வாரிசு வேலை திட்டத்தில் ரயில்வேயில் விருப்ப ஓய்வு பெற்ற 50 முதல் 60 வயதினரை காலிப் பணியிடங்களில், ஓய்வு பெற்றவர்கள் மறுநியமனத்துக்கு ரயில்வே அனுமதிப்பது இல்லை. ஓய்வு பெற்றவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் சேர்க்க அனுமதித்த நிர்வாகம் முன்னாள் ராணுவத்தினரை ஐம்பது வயதுக்கு குறைவாக இருந் தால் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதித்தது.

தொடர்ச்சியாக 15 முதல் 25 ஆண்டுகள் இவர்களை பணியாற்ற வைக்க முடியும்.

இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘முன்னாள் ராணுவத்தினர் சேர்க்கை, நிரந்தர பணியில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனமாகும். மேலும் நிரந்தர பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனங்களை முன்னாள் ராணுவத்தினரை கொண்டு மேற் கொண்டால் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பது கூடுதல் நோக்கம்.

பாதுகாப்புப் பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானது. இவர்கள், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இல்லை.

முன்னாள் ராணுவத்தினர் நியமனங்களால் கடைநிலை பணியில் நிரந்த பணியாளர்கள் நியமனம் நின்று போகும் அல்லது மிகக் குறைவாக மாறும். மேலும் பணியில் உள்ள நிரந்த ஊழியர்களின் பதவி உயர்வுகளை பறிக்கும் நிலை ஏற்படும்.

ரயில்வே துறை மேற்கொண்டு வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு படித்த திறமையான இளைஞர்கள் நியமனமே கை கொடுக்கும்.

ரயில்வே குரூப் டி பதவிகளில் முன்னாள் ராணுவத்தினர் நியமனம் நிரந்தர பணியாளர்களை குறைக்கும் திட்டமாகும். நிரந்தர பணியாளர்களை உடனே தேர்வு செய்து, முன்னாள் ராணுவத்தினரை விடுவிக்க வேண்டும்’’ என்றார்.