கரூர் ரயில்வே ஸ்டேஷனில், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தென் மாநிலங்களில் நுழைவு வாயில் மற்றும் தொழில் நகராக வளர்ந்து வரும் கரூர் வழியாக தினமும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. அவற்றின் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கரூர் நகருக்கு வருகின்றனர். ஆனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். இரண்டாவது பிளாட்பாரத்தில் உள்ள கழிப்பிடம் திறப்பதே இல்லை. ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, .டி.எம்.,கள் கடந்த, மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளன. கரூரில், வெளிமாநில தொழிலாளர்கள், 5,000 பேர் பணிபுரிகின்றனர். ஆனால், ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வழங்கவும், ரிசர்வ் செய்யவும் தலா, ஒரு கவுன்டர் மட்டுமே உள்ளது. இதனால், பயணிகள் டிக்கெட் பெற, நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. பயணிகளின் குடிநீர் வசதிக்கென, முதலாவது பிளாட்பாரத்தில், சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. அதில், சரிவர தண்ணீர் வருவதில்லை. அதேபோல், கடந்த ஆறு மாதங்களாக, இரண்டு தகவல் பலகைகளும் பழுதடைந்துள்ளன. அதை சீரமைக்க நடவடிக்கை இல்லை. மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரயில்வே ஸ்டேஷனுக்குள் பெரும்பாலும் செல்வதில்லை. இதனால் பயணிகள், குழந்தைகள் மற்றும் பொருட்களுடன் அரை கி.மீ., தூரம் நடந்து, பஸ் நிறுத்தம் செல்ல வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் மருத்துவமனை உதவியுடன், அவசர சிகிச்சை மையம், இங்கு திறக்கப்பட்டது. தற்போது அது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல், கரூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
News Courtesy - Dinamalar