பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில், நீலகிரி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில், நீலகிரி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கோவை -- மேட்டுப்பாளையம் இடையே, பாசஞ்சர் ரயில், கடந்த, ஐந்து ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் காரமடை, துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், வடகோவை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன், மேட்டுப்பாளையம்- - கோவை இடையே இயங்கிய பாசஞ்சர் ரயில், எண்.4 வீரபாண்டி, புதுப்பாளையம், உருமாண்டம்பாளையம் ஆகிய இடங்களிலும் நின்று சென்றது
அதே நிலையை மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிகளை சேர்ந்த பஸ் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.பெரியநாயக்கன்பாளையம் பயணிகள் கூறியதாவது:கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்
நரசிம்மநாயக்கன்பாளையம், வீரபாண்டியில் ரயில் நிலையம் அமைக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. இருந்தும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.அதேபோல், நீலகிரி எக்ஸ்பிரஸ், பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலையத்தில் நின்று சென்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பெரிய நாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில், 'ரிசர்வேஷன்' டிக்கட் வழங்கும் பிரிவையும் உடனடியாக துவக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் செய்தி
புதியது பழையவை