ரயில்வே துறை தனியார்மய முடிவுகளால் மதுரையில் இருந்து மேலூர் வழியாக காரைக்குடி வரையிலான புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது. கூடல்நகர் ரயில் நிலையம் என்னாகும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் தனியாரை புகுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் உருவான புதிய ரயில் திட்டங்களின் கதி என்னாகும்? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியில் ரயில் பயணம் கனவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன் மதுரை கூடல்நகரில் இருந்து பிரிந்து சத்திரப்பட்டி, மேலூர் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. ரயில்வே துறையினர் ஆய்வு நடத்தி முடித்தனர்.

இந்த வழித்தடத்திற்கு  மாற்றாக மதுரை-ராமேஸ்வரம் ரயில் பாதையில் கீழ்மதுரையில் இருந்து பிரிந்து புளியங்குளம், வைகை ஆறு. கருப்பாயூரணி, ராஜாக்கூர், திருமோகூர், தெற்குதெரு, மேலூர் வழியாக காரைக்குடிக்கு ரயில் பாதை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போது ஆய்வு நடத்தி முடிக்கப்பட்ட 2 வழிகளிலும் ரயில்பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே துறையின் தனியார் மய கொள்கை முடிவு காரணமாக இருக்ககூடும் என்ற புகார் எழுந்துள்ளது.

மதுரையில் விளாங்குடி, கீழ்மதுரை, பசுமலை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இது தவிர மதுரை நகருக்குள்ளும் வாகன நெருக்கடி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இந்த ரயில் நிலையங்களை பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதன் பிறகு கூடல்நகரில் புதிதாக ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் மாதிரி ரயில் நிலையங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மெயின் (ஜங்சன்) ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றபோது, கூடல்நகர் ரயில் நிலையம் இயக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும், கூடல்நகர் நிலையத்தை மூடிவிட்டனர்.
இரட்டை ரயில் பாதை திட்டம் தயாரானதும், கூடல்நகர் கைகூடும் என ரயில்வே துறையினர் நம்பிக்கையூட்டினர்.

மதுரை வரை இரட்டை பாதை செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் கூடல்நகர் கைகூடவில்லை. சென்னையில் மாம்பலம், திருநெல்வேலியில் ரயில்வே ஜங்சன் தவிர  பாளையங்கோட்டை, பேட்டை என ரயில் நிலையங்கள் இயங்கி வரும் சூழலில் மதுரையில் ஜங்சன் தவிர வேறு எங்கும் ரயில் நிலையம் இல்லாத நிலையில் கூடல் நகரும் மூடிக்கிடக்கிறது. ரயில்வே துறையில் எடுக்கப்படும் தனியார்மய முடிவுகளால், கூடல்நகர் ரயில் நிலையத்தின் கதி என்னாகும்? என்ற கேள்வி குறி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் தனியார் மயம்?
மதுரை- சென்னை இடையே இரட்டை ரயில் பாதை தயாரானதும், இந்த வழித்தடத்தில் கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஏனென்றால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மதுரை-சென்னை இடையே ஓடிய மகால், கூடல் பகல்நேர எக்ஸ்பிரஸ்கள் பறிக்கப்பட்டு, கேரளா வரை நீடிக்கப்பட்டன. இதற்கு பதிலாக கடந்த 7 மாதங்களாக மதுரை-சென்னை இடையே “தேஜஸ்” என்ற அதிவிரைவு பகல் நேர எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இதற்கு வைகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை விட அபரிமிதமான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு தேஜஸ் என்ற பெயரை மாற்றி தமிழ் பெயர் சூட்ட வேண்டுமென்ற குரலும் ஓங்கி ஒலிக்கின்றன. தனியார்மய முடிவின் அடிப்படையில் இந்த தேஜஸ் ரயில் தனியாரிடம் ஒப்படைக்க திட்டம் தயாராகி இருப்பதாக ரயில்வே துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.