கடந்த 4 ஆண்டுக்கு முன்பு, சேலம் - கரூர் வரையிலான அகல ரயில் பாதை பணி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வழியாக சேலம் - கரூர், சென்னை - பழனி, நாகர்கோவில் - பெங்களூரு மற்றும் சிறப்பு ரயில்கள் சில இயக்கப்பட்டு வருகின்றன.

சேலத்திற்கு பின் ராசிபுரம், நாமக்கல் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்கும் நிலையில், அதிக மக்கள் வசிக்கும் பகுதியான மோகனூரில் ரயில்கள் நிற்பதில்லை. பரமத்திவேலூரைச் சேர்ந்தவர்கள் மோகனூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் ரயிலில் மட்டுமே அவர்களால் செல்ல முடிகிறது. விரைவு ரயில்களில் செல்ல வேண்டுமெனில், சேலம் அல்லது கரூருக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதற்கு தீர்வு காண, அனைத்து விரைவு ரயில்களும் மோகனூரில் நின்று செல்ல சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து மோகனூர் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியது: வட்ட தலைமையிடமான நாமக்கல், ராசிபுரத்தில் ரயில்கள் நிற்கும் நிலையில், மோகனூரும் வட்ட தலைநகர் தான். அங்குள்ள ரயில் நிலையத்திலும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இந்த வழித்தடங்கள் அனைத்தும் மின்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ரயில் எங்கு நின்று சென்றாலும் எரிபொருள் இழப்பு என்பது இருக்காது. ரயில்கள் அனைத்தும் இங்கு நின்று சென்றால் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகளவில் பயன்பெறுவர். இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.