இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் அதிகம் பேர் பயணிக்கும் ரயில் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையற்ற, தனியார் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த முடிவு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தெற்கு ரயில்வே துறை உள்ளிட்ட மொத்தம் 6 ரயில்வே மண்டலங்களின் தலைமை இயக்க மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள 23.09.2019 தேதியிட்ட சுற்றறிக்கையில் தான் ரயில்களை தனியார்மயமாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு டில்லியில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரயில் பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்கள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்குவார்கள்; மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்; நவீன வசதிகள் கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்; இதனால் பயணிகள் மிகவும் விரைவாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க முடியும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

தனியார் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்பதாலும், சாதாரண வகுப்புக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பதாலும் ஏழைகளுக்கு ரயில் பயணம் என்பது எட்டாக்கனியாகி விடும்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களின் புறநகர் ரயில்களும் தனியார்மயமாக்கப்படும் என்பதால் குறைந்த கட்டணத்தில் புறநகர் ரயில்கள் மூலம் அன்றாடம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். புறநகர் ரயில் கட்டணங்களில் 66 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருவதால், அவை தனியார்மயமாக்கப்படும் போது 3 மடங்கு அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படும். மாதாந்திர பயணச்சீட்டு முறையும் ஒழிக்கப்படும் என்பதால் புறநகர் ரயில்களில் பயணிப்பவர்கள் மாதம் ரூ.2000 வரை கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்திருந்தார். அவ்வாறு உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் ரயில்களை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயம் அல்ல. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி. தினகரன் கண்டனம்

டிடிவி. தினகரன் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைத் தனியார்மயமாக்குவதால் கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாகச் செயல்படுத்துவதில் தவறில்லை. அதேநேரத்தில், ரயில் பாதைகளையும், ரயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது. எனவே மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என டிடிவி. தினகரன் டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகள் நன்றி - தினமலர்