இந்தி மொழியை வளர்ப்பதில் சிறப்பாக செயல்பட்டதாக திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு விருது


இந்தி மொழியிலான அலுவலக பயன்பாடு மற்றும் மொழி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உயர் சிறப்பு விருதை ரயில்வே துறை வழங்கியுள்ளது.
தலைநர் டெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்த விருதானது (ராஜ்பாஷா ரஜாத் பதக்) வழங்கப்பட்டுள்ளது.
இந்தி பேசாதவர்கள் உள்ள மாநிலங்களில் இந்தி மொழி பயன்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் கோட்டங்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

இதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்கு இந்த விருது தற்போது திருச்சி கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
டில்லியில் நடைபெற்ற விழாவில், திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு இந்த விருதை மதுரைக் கோட்டம் பெற்றது.
திருச்சி கோட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ரயில்வே துறையில் தொடர்ந்து இந்தி திணிப்பு, தமிழர்களுக்கான வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில் இந்த விருது கிடைத்துள்ளது.
ரயில் நிலையங்களில் தமிழ் தெரியாத வட இந்தியர்கள் பணியில் உள்ளதால் தமிழ்நாட்டு பயணிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.எனவே, ரயில் நிலையங்கள் & பயணிகள் பயன்பாடு உள்ள இடங்களில் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பிக்களும் கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரயில்சேவையைப் பயன்படுத்துவோரான தமிழ்நாட்டினரின் மொழியைப் புறக்கணித்து, இந்தியைத் திணித்து பயணிகளை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் இந்த முயற்சியை ரயில் பயனீட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.


 செய்திகள் நன்றி - நியூஸ் 18