பழனி கண்பத் கிராண்ட் வளாகத்தில் திங்கள்கிழமை பழனி ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி., விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கௌரவத் தலைவராக கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, தலைவராக முருகானந்தம், செயலாளராக பச்சைமுத்து, பொருளாளராக நாகேஸ்வரன், ஆலோசகராக வழக்குரைஞர் ஹரிகரன் உள்ளிட்ட 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சங்கத்தின் பதாகையை நிர்வாகிகள் அறிமுகம் செய்தனர். கூட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரன், சுழற்சங்கம், அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
பழனி மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது சுமார் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரயில் பாதையாக மாற்றிய பிறகு ரயில்களின் சேவைகள் குறைவாக உள்ளதாக சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர். கூட்ட முடிவில் பழனி - கோவை இடையே தினசரி ரயில் சேவை தொடங்க வேண்டும், பாலக்காடு விரைவு ரயிலில் குளிர்சாதன வகுப்பு மற்றும் முன்பதிவற்ற வகுப்பில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், பகல் நேரத்தில் பழனி - சென்னை, பழனி - திருப்பதி இடையே புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாலக்காடு முதல் திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் தற்போது திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படுகிறது என்றும் அதை மீண்டும் திருச்செந்தூர் வரை இயக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டது.