மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது ராமேஸ்வரத்தில் இருந்து -கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. 2004ல் அகல ரயில் பாதை பணி நடந்த போது இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மதுரை -ராமேஸ்வரம் அகல ரயில் பாதை பணி முடிந்து 2007 ல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.
ஆனால் மதுரை-கோவைக்கு இயக்கப்பட்ட தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. 18 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு தொடர்ந்து பயணிகள் சார்பில் ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியது
சமீபத்தில் திருச்சியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடந்த எம்.பி.,க்கள் கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, மதுரை எம்.பி., வெங்கடேசன் ஆகியோர் இந்த ரயிலை இயக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ராமேஸ்வரம்- கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கிறது. தினசரி இரவு 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு மறு நாள் காலை 6:30 மணிக்கு சென்றடையும்.
அதே போல் மறு மார்க்கத்தில் கோவையில் இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, இதே வழியாக ராமேஸ்வரத்திற்கு மறு நாள் காலை 6:30 மணிக்கு வந்து சேரும். ராமநாதபுரத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள் அதிகளவில்இருப்பதால், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.