பாம்பனில் புதிய ரயில் பாலம்: கடலில் ஆய்வு


ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்காக தனியார் பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் பாலம் பலமிழந்து அடிக்கடி மராமத்து பணிகள் செய்யவேண்டியுள்ளது. கடந்த டிச.,4ல் துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்து 84 நாட்கள் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை ரத்தானது. இந்நிலையில், பாம்பன் கடலில் 250 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து மார்ச் 1 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின் பாம்பன் கடலில் உப்பு, காரத் தன்மை குறித்து 40 நாட்கள் கடலில் துளையிட்டு மணல் சேகரித்து சென்னையில் பரிசோதனை செய்தனர்.இதனை தொடர்ந்து நேற்று தற்போதைய பாலத்தின் வடக்கு பகுதியில் அமையும் புதிய பாலத்திற்கு ரயில் துாக்கு பாலத்தில் இருந்தபடி குஜராத் ஆமதாபாத்தை சேர்ந்த தனியார் பொறியாளர் குழுவினர் 'டோட்டல் ஸ்டேஷன்' என்ற கருவியில் கடல் பகுதியை ஆய்வு செய்தனர். இதன் ஆய்வறிக்கையை ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பிய பிறகு பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கும், என பொறியாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் நன்றி - தினமலர்