திருவாரூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றக் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் கோரிக்கை

திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் செயலர் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை: தென்னக ரயில்வேயின் முக்கிய கேந்திரமாக விளங்குவது திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் ஏறக்குறைய முதிர்ச்சி கட்டத்தை அடைந்து விட்டது.
அனைத்து ரயில்களுக்கும் தற்போது திருச்சி அல்லது விழுப்புரத்தில் மட்டுமே பணிமனை உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்பக் கூடுதலாக ஒரு முனையத்தை அமைப்பது காலத்தின் கட்டாயம். அந்த அடிப்படையில் மின்சார ரயில்களுக்கு திருச்சி மற்றும் விழுப்புரத்தில் பணிமனைகள் இருந்தாலும் எஞ்சியுள்ள டீசல் எஞ்சின்களுக்கு ஒரு காலம் வரை பணிமனை தேவை. அந்த அடிப்படையில் திருவாரூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டும்.

திருவாரூர் ரயில் நிலையமானது, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் மிகப் பெரிய நிலப்பரப்பு, தண்ணீர் வசதி, அருகிலேயே பணியாளர் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, கும்பகோணம், மன்னார்குடி, நீடாமங்கலம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களின் மைய கேந்திரமாக திகழ்கிறது. மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகள் உள்ளதால், திருவாரூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற தென்னக ரயில்வே பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.