நீடாமங்கலத்தில் நாள்தோறும் மணிக்கணக்காக தொடரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்களின் நீண்ட கால மேம்பால கனவு நிறைவேற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுக்கா மற்றும் பேரூராட்சி தலைமையிடமாக இருந்து வருகிறது. இங்கு, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான சிறு, சிறு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

சாலைப் போக்குவரத்து:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய ஊர்களுக்கு வந்து செல்கின்றன.

ரயில் மார்க்கம்: இதேபோல், நாள்தோறும் காரைக்காலிருந்து நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர், திருச்சிக்கும், மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரைக்கும், மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயிலும், மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னைக்கு மன்னை விரைவு ரயில், மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி விரைவு ரயில், காரைக்காலிலிருந்து நீடாமங்கலம் வழியாக எர்ணாகுளம் விரைவு ரயில் என நாள்தோறும் ரயில்கள் சென்று வருகின்றன. இதுதவிர, வாராந்திர ரயில்களும், சரக்கு ரயில்களும் நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெருக்கடி:
நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட், தஞ்சை சாலையில், ஒரத்தூர் ரயில்வேகேட், ஆதனூர் ரயில்வே கேட், நீடாமங்கலம் திருவாரூர் சாலையில் கப்பலுடையான் ரயில்வே கேட் ஆகிய ரயில்வே கேட்கள் உள்ளன. ரயில் நிலைத்துக்கு ரயில்கள் வரும்போதும், நின்று செல்லும் போதும் ரயில்வே கேட்கள் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்து ஏற்படுகிறது.

இதனால், சாலைப் போக்குவரத்தில் பயணிப்பவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மணிக்கணக்காக ரயில்வே கேட் மூடப்படுகின்றன. இதனால், திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளிலிருந்து செல்லும் செல்வோர், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்பவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். பல நேரங்களில் விபத்தில் சிக்குவோர் உரிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மாற்று வழியாக புறவழிச்சாலைத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

புறவழிச் சாலைத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு: இந்நிலையில், கடந்த கால மத்திய ஆட்சியில் நீடாமங்கலம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்தால் புறவழிச்சாலைத் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, 4 வழிச் சாலைத் திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, நிதி பற்றாக்குறை காரணமாக 4 வழிச் சாலைத் திட்டம் 2 வழிச்சாலைத் திட்டமாக அறிவிக்கப்பட்டு அப்பணியும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளன.

மேம்பாலம்: இந்நிலையில், நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் ரூ. 20 கோடி மேம்பால பணிக்கு ஒதுக்கியதையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறையினரும், ரயில்வே உயரதிகாரிகளும் மேம்பாலம் அமைவதற்கான வரைபடத்தை தயாரித்தனர்.

அப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகள் ஆகும் என்பதால், உடனடியாக கீழ்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.
இதையடுத்து, மத்திய அரசும் மேம்பாலத்துக்கு ரூ. 44. 47 கோடியை ஒதுக்கியது. இதையடுத்து, மேம்பாலம் அமைக்க மண் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பின் எந்த பணியும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் மேம்பாலம் அமையும் பகுதியில் (ஒரத்தூர் கிராமம்) நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால் அதற்கான நிலங்கள் பாதிக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறியது: நீடாமங்கலத்தில் நாள்தோறும் மணிக்கணக்காக ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். தஞ்சாவூர்- நாகப்பட்டினம் வரையிலான 2 வழிச்சாலைத் திட்டப் பணியை துரிதப்படுத்த வேண்டும், இந்த இரு பணிகளுக்கும் இடையில் கீழ்பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

இப்பணிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தொடங்கி நீடாமங்கலத்தில் நாள்தோறும் மணிக்கணக்கில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண மேம்பாலத்தை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.