மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், மின் பாதை அமைக்கும் முன்பு, டிக்கெட் வழங்கும் அலுவலகம் அருகே இருந்து, தண்டவாளங்களை கடந்து சென்று, ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அருகே, கீழே இறங்கும் வகையில், நடைபாதை மேம்பாலம் இருந்தது.மின்பாதை அமைத்த போது, நடைபாதை மேம்பாலத்தை அகற்றினர். அதன் பின்பு கடந்த மூன்றாண்டாக நடைபாதை மேம்பாலம் இல்லாததால், பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.ரயில் பயணிகளில் சிலர், டிக்கெட் வாங்கிக் கொண்டு, தண்டவாளத்தை கடந்து செல்வதற்குள், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை பாசஞ்சர் ரயிலை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ரயில் பயணிகள், நடைபாதை ரயில்வே மேம்பாலம் அமைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்

ரயில்வே நிர்வாகம் புதிய நடைபாதை மேம்பாலம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மூன்று மீட்டர் அகலத்தில், 74 மீட்டர் நீலத்தில், 6.8 மீட்டர் உயரத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூனில் துவங்கின. இடிக்கப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டருகே, 10 பில்லர் அமைக்கப்பட்டன. அதே போல் நடை மேடையிலும், ரயில்வே ஊழியர் குடியிருப்பிலும், பில்லர் அமைத்து, அதன் மீது நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக பில்லர் மட்டுமே அமைக்கப்பட்டன. எவ்வித கட்டுமானப்பணிகளும் நடைபெறவில்லை.ரயில் பயணிகள் கூறியதாவது: நடைபாதை மேம்பாலம் அமைத்தால், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயிலுக்கு செல்ல வசதியாக இருக்கும். மேலும், சாந்தி நகர், ரயில்வே குடியிருப்பில் உள்ள மக்கள், தற்போது தண்டவாளத்தை கடந்து, பஸ் ஸ்டாண்டுக்கு செல்கின்றனர். சில நேரங்களில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், பிளாட்பாரத்தில் நடந்து செல்லும், பொது மக்களிடம் டிக்கெட் இல்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். அதனால் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகளை, விரைவாக நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'கான்கிரீட் பில்லர்கள் மீது வைக்க, பாலம் அமைப்பதற்கான இரும்புகளை இணைக்கும் கட்டுமானப்பணி நடை பெற்று வருகிறது. விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்,'என்றனர்.