ரயில் நிலையங்களில் அசுத்தம் - அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவுபிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் குப்பைகள் கொட்டாமல், தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு ரயில் நிலையங்களில் குப்பைகள் கொட்டாமல் பேணிக் காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும், ரயில் நிலையங்களில் உணவுக் கழிவுகளை வீசிச் செல்வது, பிளாஸ்டிக், காகிதக் குப்பைகளை எறிவது, திறந்த வெளியில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அசுத்தம் செய்வது தொடர்கிறது.
குறிப்பாக கோவை ரயில் நிலையத்தில், நடைமேடைகளில் உணவுக் கழிவுகளை வீசிச் செல்வது, குப்பைகளைக் கொட்டுவது உள்ளிட்ட அசுத்த நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ரூ.300 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்தும், பெரும்பாலும் அபராதம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், ரயில் நிலையத் தூய்மையைப் பேணும் விதமாக, அசுத்த நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது அபராதத் தொகை வசூலை தீவிரப்படுத்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு, தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.