பழனிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கும் வகையில் படுக்கை வசதியுடன் கூடிய தங்கும் விடுதி கட்ட ரயில்வே நிர்வாக கோட்ட மேலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

பழனி ரயில் நிலையத்தை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் சனிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.  அப்போது அவரை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கந்தசாமி, நகர்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.  அதில், பழனிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் ஓய்வறை இல்லாமல் திண்டாடும் நிலை உள்ளது.

எனவே  படுக்கை வசதியுடன் கூடிய தங்கும் விடுதி கட்ட வேண்டும். பழனி ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.  பழனியில் இருந்து கோவைக்கு தினசரி பயணிகள் (பாசஞ்சர்) ரயில் இயக்க வேண்டும்.  பழனியில் இருந்து திருச்சி மார்க்கமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும். திருச்செந்தூர், சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல மாலையில் பழனி ரயில் நிலையத்திற்கு வந்த கோட்ட மேலாளரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதிகளும் இல்லாதது குறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர செயலாளர் தங்கவேல் தலைமையில், நகர துணைத்தலைவர் மோகன்ராஜ் உயரம் தடைபட்டோர் கிளை மாநில செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் மனு வழங்கினர்.