ராசிபுரம் ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது ரயில்பாதையில் நீண்டநாட்கள் சரக்கு ரயில் பெட்டி நிற்க வைத்துள்ளது ரயில் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.


ராசிபுரம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் பயணிகள் ரயில், அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சேலம்-கரூர் பயணிகள் ரயில், பழனி வழியாக செல்லும் சென்னை - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதி வழியாகச் செல்லும் நாகர்கோவில்-கச்சிக்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம்-ஒஹா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் போன்ற ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களும், அதிகவேக விரைவு ரயில்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.
மேலும், தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராசிபுரம் ரயில் நிலையத்தின் பிரதான முதலாவது நடைமேடையில், ஒரு மாதத்திற்கு மேலாக 58 வேகன்கள் கூடிய சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் டிக்கெட் பெற்றுக்கொண்டு மேலும் படிகளில் இறங்கி 2-வது நடைமேடைக்கு சென்று ரயில்கள் பிடிக்க வேண்டியுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ரயில்வே நிர்வாகம் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரக்கு ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.