100 ஆண்டுகால கனவுத்திட்டமாக விளங்கிய பழநி - ஈரோடு அகல ரயில் பாதை திட்டம் பல்வேறு போராட்டங்களுக்கு பின் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஈரோடு - பழனி ரயில் பாதை திட்டம்


இந்த திட்டத்தின் படி பழநி, தொப்பம்பட்டி, தாராபுரம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக ஈரோட்டை அடையும் வகையில் 91.5 கிமீ தொலைவில் வழித்தடம் திட்டமிடப்பட்டது. இதில் 6 பெரிய பாலங்களும், 42 சிறுபாலங்களும் கட்டப்பட்டு 2008ல் சுமார் ரூ.364 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கடந்த 2008, டிச.22ம் தேதி இத்திட்டத்திற்காக பூமி பூஜை நடந்தது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக அப்போதே ரூ.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு 50 சதவீதம் மாநில அரசு பங்குத்தொகையாக வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் இத்திட்டம் நிறைவேற எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.

பழநி - ஈரோடு ரயில்வே மக்கள் பணிச்சங்க பொதுச் செயலாளர் லிங்கம் சின்னச்சாமி

இத்திட்டம் திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 60 லட்சம் மக்களின் 100 ஆண்டுகால கனவாகும். இதற்காக கடந்த 67 வருடங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. சர்வே பணிக்காக ரூபாய் 69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 கட்டமாக சர்வே பணிகள் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி இத்திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்ய ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டமும் முடக்கப்பட்டது.

திட்டம் முடக்கம் - குற்றச்சாட்டு

இத்திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்குத்தொகையாக திட்டமதிப்பீட்டில் 50சதவீதம் தொகையை வழங்க வேண்டும். ஆனால் நிதி பற்றாக்குறை, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் சிக்கல்கள், நிலம் கையகப்படுத்து தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் என பல்வேறு காரணங்களைக் கூறி அதிமுக அரசு இத்திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளது. மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நேரடி ரயில் அல்லது இணைப்பு ரயில்கள் மூலம் இவ்வூர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று விட முடியும். இதனால் இவ்வழித்தடங்களில் செல்லும் தனியார் பஸ்களுக்கு போதிய கூட்டம் இருக்காது. லாபம் குறையும். இதனால் சில பஸ் கம்பெனி முதலாளிகள் இத்திட்டத்தை முடக்கி வைக்க ரயில்வே அதிகாரிகள், ஆளும் தரப்புகளை ‘கவனிப்பு’ செய்துதள்ளதாக கூறப்படுகிறது.

திட்டம் குறித்த போராட்டம்

100 ஆண்டுகால கனவுத்திட்டமாக இருந்து வரும் பழநி-ஈரோடு அகலரயில்பாதை திட்டத்திற்கான முதல் போராட்டம் 1952ம் ஆண்டு துவங்கியது. போராட்டத்தை துவக்கியவர் அப்போதைய பிரஜா சோஷலிஸ்ட் இயக்க நிர்வாகியும், தமிழக விவசாயிகள் சங்க தலைவருமாக இருந்த தற்போதைய திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, குளத்துபாளையத்தைச் சேர்ந்த லிங்கசாமி என்பவர் ஆவார். 1999ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி லிங்கசாமி உயிரிழந்து விட, தற்போது அவரது மகன் சின்னச்சாமி போராட்ட களத்தில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார். பழநி-ஈரோடு அகலரயில்பாதை மக்கள் பணிச்சங்கம் எனும் அமைப்பு துவங்கப்பட்டு, விவசாயிகள், ஆன்மீகவாதிகள், இளைஞர்கள், தொண்டு அமைப்புகள் இதன் உறுப்பினர்களாக இருந்து தற்போது கையெழுத்து இயக்கம், உண்ணாவிரதம், மனு அளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.