போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தவும், வர்த்தகத்தை பெருக்கவும், கோவை, - திருப்பூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என, நிட்மா தலைவர் ரத்தினசாமி தெரிவித்தார்.


யார்னெக்ஸ் கண்காட்சி துவக்க விழாவை தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: செயற்கை நுாலிழை, துணி ரகங்கள் கண்காட்சியில் அதிகம் இடம்பெற்றுள்ளன. புதுவகை நுால், துணி ரகங்கள், எங்கெங்கு கிடைக்கின்றன என, கண்காட்சி மூலம், ஆடை உற்பத்தி துறையினர், எளிதாக கண்டறியமுடிகிறது.


சர்வதேச அளவில் 75 சதவீதம், செயற்கை இழை ஆடை தேவை உள்ளது. திருப்பூர் தொழில் துறையினர் துவக்க காலம் முதல், பருத்தி ஆடை தயாரிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அனைத்து ஆடை உற்பத்தி துறையினரும் கண்காட்சியை பார்வையிடவேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களை தயாரித்து, வர்த்தகத்தை உயர்த்த வேண்டும்.

நிட்மா தலைவர் ரத்தினசாமி: ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினருக்கும், பருத்தி அல்லாத செயற்கை நுாலிழை துணி ரகங்கள் அதிகளவு தேவைப்படுகின்றன. இருவகை ஆடை தயாரிப்பு துறையினருக்கும், இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும்.எத்தகைய நுாலிழையிலும் துணி தயாரிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன, திருப்பூர் நிட்டிங் நிறுவனங்கள்.திருப்பூரின் வளர்ச்சி வேகமாக உள்ளது. அதற்கேற்ப, நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவருகிறது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது. கோவை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து விமான நிலையம்; விமான நிலையத்திலிருந்து திருப்பூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கப்பட வேண்டும். இதன்மூலம், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்கள் எளிதாக திருப்பூர் வந்து செல்லமுடியும்; திருப்பூர் தொழில் துறையினரும் எளிதாக விமான நிலையம் செல்லமுடியும். வர்த்தக வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த திட்டம் கைகொடுக்கும்.இவ்வாறு, தொழில் அமைப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

புதியது பழையவை