தமிழகத்திலும் தனியார் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஆலோசனை


இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தற்போதைய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு படியாக ரயில்வே துறையில் சில ரயில்களை தனியாருக்கு இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தென்னக ரயில்வே துறையை 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையை கொண்டுவர பிரதமர் மோடி அரசு முணைப்புக் காட்டுகிறது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை, சென்னை - மதுரை போன்ற வழிதடங்களில் தனியார் ரயில் சேவையை கொண்டுவர திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னை புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும் தனியார் ரயில் சேவையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “மோடி அரசின் இந்த நடவடிக்கை தனியாருக்கு ரயில்வே துறையை ஒப்படைப்பதற்கான சோதனை முயற்சியாகத்தான் பார்க்கிறோம். இதனால் ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்படும்.

மேலும் அந்த நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் விலையை உயர்த்தும். பாஸ் மூலம் பயணிக்கும் முறையும் ரத்து செய்வார்கள். இனி ரயிலை இந்தியன் ரயில்வே துறை நிர்வகிக்காது; அதற்கு மாறாக தனியார் பெரும் நிறுவனங்கள் நிர்வகிக்கும். இதனைத் தடுக்க ஊழியர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.