மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு


புகழ் பெற்ற மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புனித தலங்களுக்கு ரயில்வே நிர்வாகம் மதுரை, ராமேஸ்வரம் இடையே காலை 5.30 மணிக்கும் மதியம் 12 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் இரு மார்க்கங்களிலும் பயணிகள் ரயில்கள் இயக்கி வருகிறது.
நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 13 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தி வருவதால் வழக்கமான நாட்களில் கூட கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சரக்கு பெட்டிகளிலும் பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சரக்கு பெட்டியில் கழிவறை இருப்பதில்லை இதில் பயணம் செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் செய்யும் அவலம் நிலவுகிறது. இந்நிலையில் மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில்களில் தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதை போல மதுரை, ராமேஸ்வரம் பயணிகள் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ராமேஸ்வரம் - மதுரை அல்லது திருச்சி இடையே பகல் நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரி வருகின்றனர்.