97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை - போடி ரயில்?

மதுரை: மதுரை - போடி ரயில் பாதையில் 97 ஆண்டுகள் ஓடிய ரயில்சேவை நிறுத்தப்பட்டு 9 ஆண்டுகளாகியும் மீண்டும் இயக்கமுடியாத இழுபறி நீடிக்கிறது. மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி வரை 93 ஆண்டுகளுக்கும் மேலாக மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பாதை ஏன், எப்படி உருவானது என்பதின் பின்னணி சிறப்புக்குரியது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அதன் அடிவாரங்கள் காபி, தேயிலை, ஏலக்காய், மிளகு, பருத்தி, காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் அதிகளவில் உற்பத்தியாகும் பகுதிகளாகும். இதனை உற்பத்தி செய்வோருக்கு சரியான விலை கிடைக்கும் நோக்குடன் வெளி மார்க்கெட் ஏற்றுமதிக்கு வசதியாக ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரை - போடி இடையே 1913ல் ரயில் பாதை அமைத்து கொடுத்தனர். அப்போது நீராவி இன்ஜின் ரயில் ஓடியது.

மூணாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விளைந்த பொருட்கள் போடி அருகே குரங்கணி வரை மலைப்பாதையில் வின்ச் மூலம் கொண்டு வந்து, அங்கிருந்து போடி ரயில் நிலையத்திற்கு எடுத்து வந்து சேர்த்தனர். இங்கிருந்து ரயிலில் மதுரை வழியாக டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் விவசாயமும், வியாபாரமும் பெருகியது. அன்றாட ரயில் பயணம் மக்களை மகிழ்வித்தது. இந்த ரயில் பாதை ஆண்டிபட்டி அருகே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மலைகளுக்கு நடுவில் ரயில் பயணம், இப்பகுதி மக்களுக்கு ஆனந்தமாக இருந்தது. இதன் அழகு சினிமாக்களிலும் பலமுறை பதிவாகி இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளையும் இந்த ரயில் கவர்ந்தது. 1996ல் நீராவி இன்ஜின் மாறி டீசல் இன்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டது.

இந்தச் சூழலில் மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் 2010ல் அறிவிக்கப்பட்டது. ரூ.180 கோடியில் இந்த பணி 2015ல் முடிக்கப்பட்டு, மீண்டும் ரயில் சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை - போடி இடையே 97 ஆண்டுகளை தாண்டி நூற்றாண்டு நெருங்கிய நிலையில் 2010, டிசம்பரில் மீட்டர்கேஜ் தண்டவாளம் அகற்றப்பட்டு மூடுவிழா கண்டது. அதோடு பறிபோன ரயில் சேவை 9 ஆண்டுகள் உருண்டோடியும் இன்னும் மீளவில்லை.
அகலப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் யானைப்பசிக்கு சோளப்பொறியாக நிதி ஒதுக்கப்பட்டதால் ஆமைவேகத்தில் நகர்ந்து, இடைக்காலத்தில் படுத்துக்கொண்டது. மதுரை - போடி இடையே 90 கிமீ தூரம் அகலப்பாதை திட்டத்தில் 8 பெரிய பாலங்கள் மற்றும் 190 சிறிய பாலங்களும் கட்டுவதற்கு மீண்டும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதன்படி 2018ல் ரூ.300 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டன. அடுத்து உசிலம்பட்டி முதல் போடி வரை பணிகள் நடைபெற வேண்டும். இதில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டிபட்டி கணவாய் மலையில் அகலபாதை அமைக்க வேண்டி உள்ளது. இந்த பாதையில் ரயில் பயணத்தை அனுபவித்த மதுரை முதல் போடி வரையுள்ள மக்கள் கூறும்போது, ‘‘சொகுசாக பயணித்த ரயில் பறிபோய் 9 ஆண்டுகளாகியும், மீண்டும் ஓடாமல் அந்த பாதை கண்ணீர் வடிக்கிறது. ரயில் எப்போது ஓடும் என்று ஏங்குகிறோம். தேனி மாவட்டத்தில் விளைந்த பொருட்களை மதுரை வழியாக வெளிமாநிலங்களுக்கு ரயிலில் அனுப்ப முடியாமல் தவிக்கிறோம்’’ என்றனர். ரயில்வே துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உசிலம்பட்டி வரையிலான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். அங்கிருந்து போடி வரையிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020க்குள் பணிகள் முடிக்கப்படும்’’ என்றார்.

திண்டுக்கல் - குமுளி ரயில்பாதை ஏமாற்றம்

திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம், தேனி, குமுளி வழியாக சபரிமலைக்கு புதிதாக ரயில் பாதை திட்டம் உருவாக்கப்பட்டு, 9 ஆண்டுகளுக்கு முன் ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.. ஆனால் அந்த திட்டத்தின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் மூழ்கிக் கிடக்கிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.
புதியது பழையவை