திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களில் கடைநிலைப் பணியிடங்களுக்கு தேர்வானோரில், 90 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ரயில்வேயில் காலியாக இருந்த இருப்புப் பாதை பராமரிப்பாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற ஆயிரத்து 760 கடைநிலைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 வரை பல கட்டங்களாக நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் 22 ம் தேதி தொடங்கி 24 ம் தேதி வரை உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.

திருச்சி கோட்டத்தில் பணிபுரிய 528 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 53 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும், 90 விழுக்காட்டினர் வடமாநிலத்தவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில் வடமாநிலத்தவரை குடியேற்றும் முயற்சி எனக் கூறியுள்ளார்.

இதேபோல் மதுரை கோட்டத்திற்கு நடைபெற்ற தேர்வின் மூலம் 572 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், ரயில்வே கடைநிலைப் பணியிடத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காததே இதற்கு காரணம் என ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் ரயில்வே கடைநிலைப் பணிகளை  உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி இருந்தால் அனைத்துப் பணிகளும் தகுதி அடிப்படையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை வழங்கும் வகையில் உரியச் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், மத்தியில் பா.ஜ.க அரசும், தமிழகத்தில் அதிமுக அரசும் அமைந்த பிறகு தமிழக இளைஞர்களுக்கு  தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள  மத்திய அரசு அலுவலகங்களின் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் இனிமேல், தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘போட்டித்  தேர்வின் விதிமுறைகளை’ மத்திய அரசு உடனடியாகத் திருத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.