தூங்கும் நேரத்தில் நகை, பணங்கள் அபேஸ்.. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் நடக்கும் கொள்ளை

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் சமீப காலமாக நகை மற்றும் பணங்கள் கொள்ளை போவதாக ரயில்வே காவல்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் குடியாத்தம் போன்ற இடங்களில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை மற்றும் பணங்களை மர்ம நபர்கள் கொள்ளை அடிப்பதாக பல்வேறு புகார்கள் ரயில்வே வாரியத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க ரயில்வே காவல்துறை சார்பாக தனிப்படை ஒன்று உருவாக்கப்பட்ட தீவிர சோதனைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்தத் தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் நேற்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருக்கும் நான்காவது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படி நபர் ஒருவர் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் வேப்பூர் ஊராட்சியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரது மகன் வசந்தகுமார்(38 ) ஆவார். மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் பல நாட்களாக நகை மற்றும் பணங்களை இவர் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிக்னலுக்காக நடுவழியில் நின்று கொண்டிருக்கும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வசந்தகுமார் ஏறி அங்கே தூங்கி கொண்டிருக்கும் பயணிகளிடம் நகை மற்றும் பணங்களை பல நாட்களாக திருடி இருக்கிறார்.

காவல்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி, பிந்து, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி, கோவையைச் சேர்ந்த விஜயா ஆகிய பலரிடம் வெவ்வேறு நாட்களில் நகை மற்றும் பணங்களை திருடி இருக்கிறார்.

வசந்த குமாரிடம் இருந்து 11 பவுன் நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபோன்ற தமிழகத்தின் பல இடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிகளிடம் நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கூறிய காவல்துறையினர் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் ரயில்வே பெட்டிகளில் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.