தமிழகத்தில் 14 இடங்களில் உள்ள 84 ஏக்கர் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்த நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் துவக்கி உள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே துறையின் எதிர்கால பயன்பாட்டுக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விபரம் சேகரிப்பு - இந்த நிலங்களை முறையாக பயன்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நிலங்கள் குடியிருப்பு வணிகம் நிலைய பயன்பாடு என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குடியிருப்பு பயன்பாட்டுக்கான நிலங்களில் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்த ரயில்வே வாரியம் இந்த நிலங்களை வணிக வளாகங்கள் கட்டுவதற்காக நீண்டகால குத்தகையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் துவக்கி உள்ளது. மாநில வாரியாக நிலங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமாக 16 இடங்களில் வணிக பயன்பாட்டுக்கான காலிநிலங்கள் உள்ளன

நடவடிக்கைகள்
இதில் சென்னையில் அம்பத்துார் பாடி விழுப்புரம் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு குத்தகை இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் 84 ஏக்கர் நிலங்கள் குத்தகை வழங்க தயார் நிலையில் உள்ளன. இந்நிலங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக சென்னை அயனாவரத்தில் 8.6 ஏக்கர் நிலங்களை வணிக மேம்பாட்டுக்காக 45 ஆண்டு குத்தகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட தொகை 76 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள காலி நிலங்களையும் நீண்டகால குத்தகைக்கு விடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.