ஆபத்தை உணராத ரயில் பயணிகள்: அலட்சியம் காட்டினால் காத்திருக்குது அபாயம்


தண்டவாளத்தில் கடந்து தினமும் ஒருவர் உயிரிழந்து வரும் திருப்பூரில், சற்று பயமின்றி ஸ்டேஷனில் தண்டவாளங்களை பயணிகள் கடப்பது சர்வசாதாரணமாகியுள்ளது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட சோமனுாரில் இருந்து பெருந்துறைக்குள், 45 கி.மீ., தொலைவில் அவ்வப்போது விபத்துகள் நேரிடுகிறது. ஓடும் ரயில் முன் பாய்ந்து, தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது.
அவ்வகையில், மாதம், 40 பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர்.ரயில் பெட்டியில் தொங்கியபடி பயணித்து, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன. இருப்பினும், பயணிகள் போதிய பயமில்லாமல் உள்ளனர். இறப்புகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஒரு கடமையாக செய்கின்றனர். விதிமுறை மீறி தண்டவாளத்தை கடப்பவர்களை எச்சரிப்பதில்லை. சட்டங்கள் இருந்தும் குறைந்தபட்ச அபராத தொகை கூட வசூலிப்பதில்லை.

இதன் விளைவு, நேற்று மாலை முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில் ஒரே நேரத்தில் ரயில் வந்த போது, சற்று பயமின்றி, நுாற்றுக்கணக்கான பயணிகள் ஆபத்தான தண்டவாளங்களை கடந்தனர். ரயில் பாலம், லிப்ட்டை பயன்படுத்தி ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்ம்க்கு வராமல், ஆபத்தான தண்டவாளத்தை பெண் பயணிகள் கூட கடப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது.திடீரென நடுவே ரயில்கள் வந்தால், எதிர்பாராத கோர விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் ரயில் தண்டவாளங்களை கடக்க தடை விதிக்க வேண்டும். இனியாவது, அத்துமீறுவோரை எச்சரித்து, அபராதம் விதிக்க வேண்டும்.