வழக்கறிஞர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சையது கலீஷா தாக்கல் செய்த மனுவில், மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகை வழங்குவதைப் போன்று வழக்கறிஞர்களுக்கும் 75 சதவீதம் சலுகை வழங்க உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தினார்.

படப்பிடிப்பிற்காக செல்லும் திரைத்துறையினருக்கு 75 சதவிகிதமும், மருத்துவர்களுக்கு 10 சதவிகிதமும், காதுகேளாத வாய்பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கு 50 சதவிகிதமும் கட்டண சலுகை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு பயணம் செய்யும் வழக்கறிஞர்களுக்கும் கட்டண சலுகை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.