ரயில்வே துறையில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகளிடம், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7.88 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்துள்ளது.


ரயில்வே துறையில் வருடா வருடம் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகையானது, என்ன தான் ரயில்வே கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும், அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் சென்ட்ரல் ரயில்வே, புனே டிவிசனில், 5 மாதத்தில் இப்படி தொகையை வசூலித்திருப்பது சற்றே அனைவரின் பார்வையும் இதன் பக்கம் திருப்பியுள்ளது. குறிப்பாக Pune-Malawli, Pune-Miraj, Pune-Baramati and Kolhapur-Miraj வழித்தடங்களில் இந்த அபராத தொகை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் மூலம் 1.53 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ரயில் டிக்கெட் எடுக்காதவர்கள், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதவர்கள், லக்கேஜ் சம்பந்தமான அபராதம் என்றும் இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முன்னதாக வெளிவந்த அறிக்கையில், கடந்த 2016 - 2017ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து பெறும் அபராதம் போதுமானதாக இல்லை. இதனால் சரியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டதோடு, இனி இது போன்ற நடவடிக்கை தொடரக்கூடாது எனவும் நாடாளுமன்ற கூட்டுக்குழு எச்சரித்ததோடு, சில விதிமுறைகளையும் விதித்தது.

இந்த நிலையில் ரயில்வே துறை அனைத்து துறை மண்டல அதிகாரிகளுக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களுக்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடுத்து, கடந்த 2016 - 2017ம் ஆண்டு டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.405.30 கோடி ரூபாய் அபராதமும், இதே 2017 - 2018ம் ஆண்டு ரூ.441.62 கோடி அபராதமும், 2018-2019-ம் ஆண்டில் ரூ.530.06 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 89 லட்சம் பேர் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்துள்ளனர். அவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.250 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், நாளுக்கு நாள் இந்த அபராத தொகையானது, அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.