இந்தியாவின் முதல் தனியார் ரயிலை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகின்றன அக்டோபர் 4ம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.


இந்தியாவின் ரயில்வே துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக தனியார் நிறுவனத்தின் கீழ் புதிய ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலுக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லி வரை செல்லும் இந்த ரயிலை வரும் அக்டோபர் 4ஆம் தேதி லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கவுள்ளார்.

லக்னோ முதல் டெல்லி வரையிலான 554 கி.மீ தூரத்தை இந்த ரயில் 6.15 நிமிடங்களில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் சிறப்பு வசதிகளுடன் கூடிய ஏசி கம்பார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. அதில் 56 இருக்கைகள் உள்ளன. இதுதவிர 78 இருக்கைகள் கொண்ட 9 ஏசி கம்பார்ட்மெண்ட் உள்ளன. 

அதைத்தொடர்ந்து ஏசி அல்லாத கம்பார்ட்மெண்ட்டுகள் என சேர்த்து மொத்தம் 758 இருக்கைகள் ரயிலில் உள்ளன. டெல்லியில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.25 மணிக்கு டெல்லியை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு லக்னோவை வந்தடையும்.
இதற்கிடையே கான்பூர் செண்ட்ரல் மற்றும் காசியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நிற்கும். இந்த ரயில் முழுக்க இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்ரேஷன் (IRCTC) என்ற நிறுவனத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படவுள்ளது. வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் மட்டுமே பெற முடியும். நேரடியாக கவுண்டர்களுக்கு சென்று டிக்கெட்டுகளை வாங்க முடியாது.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் 60 நாட்களுக்கு முன்பு வரை செய்து கொள்ளலாம். அரசின் சார்பில் இயக்கப்படும் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விமான டிக்கெட்டின் விலையில் பாதி இருக்கும் என கூறப்படுகிறது.
செய்திகள் நன்றி - புதிய தலைமுறை