பிலாஸ்பூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் வாராந்திர விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை பகல் 12.40-க்கு ஜோலார்பேட்டைக்கு வந்தது. அப்போது, ரயில் என்ஜினில் இருந்து 7-ஆவது பெட்டியில் திடீரென அதிக சப்தம் ஏற்பட்டது.
இதையடுத்து ரயில் என்ஜின் ஓட்டுநர் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்று பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், பழுதைச் சீரமைக்க முடியாததால் அந்தப் பெட்டியை மட்டும் அகற்றிவிட்டு மீதமுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டு, 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்தப் பெட்டி ஏற்கெனவே பழுதடைந்திருந்தது.
இதுதொடர்பாக ரேணிகுண்டா ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை செய்ததில் எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறினர். ஆனால் அதிக அதிர்வு ஏற்படுவதாக பயணிகள் புகார் அளித்ததன் பேரில், அந்தப் பெட்டி மாற்றம் செய்யப்பட்டது என்றனர்.