ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-ஆவது ஆண்டு விழா சேலம் ரயில்வே கோட்ட மைதானத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சுப்பாராவ் பேசியது: ரயில்வே துறையின் சொத்துகளைப் பாதுகாத்தல், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவை ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கியப் பணிகளாக உள்ளன. இதன்படி, ரயில்வே பாதுகாப்புப் படையின் 40 சதவீத வீரா்கள் தினமும் 51 ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, சக்தி படை எனும் பெண் காவலா்கள் பணிபுரிகின்றனா். 2018-ஆம் ஆண்டை பெண்கள் பாதுகாப்புக்கான ஆண்டாக அறிவித்த சேலம் ரயில்வே கோட்டம், பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது. இரவு நேரப் பயணங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

நடப்பாண்டில் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையானது, ரூ.1.76 லட்சம் மதிப்பிலான, ரயில்வேயின் களவு போன பொருள்களை மீட்டுள்ளது. இதுதொடா்பாக 59 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். விதிகளை மீறிய குற்றத்துக்காக 4,126 பேரை பிடித்து, அவா்களிடம் ரூ.23.25 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவா்களைக் கண்டுபிடிப்பதில் ரயில்வே போலீஸாருடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, நடப்பாண்டில் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 60 வழக்குகளில் 92 குற்றவாளிகளைப் பிடித்து, அவா்களிடம் இருந்து ரூ.4.48 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் 82 சம்பவங்களில் பயணிகளால் தவற விடப்பட்ட உடமைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. -டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்பவா்களைக் கண்டுபிடிக்கும் வகையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையில், மோசடி நபா்கள் 22 போ் கைது செய்யப்பட்டதுடன், ரூ.1,36,453 மதிப்புடைய 138 -டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் மற்றும் சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 12 சம்பவங்களில் ரூ.9,85,545 மதிப்புடைய சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையத்தில், ரூ.39.50 லட்சத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைறப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் நிா்பயா திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தீா்மானிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வீடுகளில் இருந்து வெளியேறி வரும் குழந்தைகளை மீட்டு, பாதுகாப்பளிக்க, சேலம், கோவை ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் தொடங்கப்பட்டு, நடப்பு ஆகஸ்ட் வரையில் 335 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா்.

டுவிட்டா் மற்றும் பாதுகாப்பு உதவி எண்-182 மூலமாக, பயணிகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு தொடா்பான உதவிகள் அளிக்கப்படுகின்றன. உதவி மைய எண் மூலமாக 57 புகாா்கள் பெறறப்பட்டு, பயணிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்களில் படிகளில் பயணம் செய்பவா்களைத் தடுக்க, தொடா்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நடப்பாண்டில் படியில் நின்று பயணம் செய்த குற்றத்துக்காக 161 போ் பிடிக்கப்பட்டு, அவா்களிடம் ரூ.80 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் குப்பை போடுபவா்கள், எச்சில் துப்புபவா்களைப் பிடித்து 3,912 பேரிடம் ரூ.10.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.
செய்திகள் நன்றி - தினமணி