உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை அடியோடு பறிக்கும் வகையிலான ரயில்வே துறையின் ஆள்தேர்வு கொள்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.


பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்; "தெற்கு ரயில்வே துறையின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் உள்ள கடைநிலைப் பணியிடங்களில் வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை அடியோடு பறிக்கும் வகையிலான ரயில்வே துறையின் ஆள்தேர்வு கொள்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி திருத்தப்பட வேண்டியதும் ஆகும்.

மதுரை கோட்டத்தில் மொத்தம் 620 டி பிரிவு பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டன. அவற்றில் 90% பணியிடங்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல், திருச்சி கோட்டத்தில் மொத்தம் 459 பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் 89 பணியிடங்கள் மட்டும் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 80% பணியிடங்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மதுரை, திருச்சி ஆகிய இரு மண்டலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக நிரப்பப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் 87% பணிகள் வட இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியையும், பாகுபாட்டையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணிகளுக்கு அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் தான் நிரப்பப்படுகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டும் தமிழ்நாட்டு இளைஞர்கள், ரயில்வே துறை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டாததால் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகக்குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசுப் பணிகளில் பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாலும், தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் பழங்குடியினர் உள்ளனர் என்பதாலும் தான் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல.

ரயில்வே துறையின் கடைநிலைப் பணிகளுக்கான எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையிலான தமிழக மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்தியில் தேர்வு நடத்தப்படுவது, வட இந்திய மாணவர்களுக்கு சலுகை காட்டும் போக்கு உள்ளிட்ட காரணங்களால் தான் அதிக எண்ணிக்கையிலான வட இந்தியர்கள் இந்த பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன பணிகளில் அதிகாரிகள் நிலையிலான பணிகள் தேசிய அளவிலும், கடைநிலைப் பணிகள் உள்ளூர் அளவிலும் நிரப்பப்பட வேண்டும் என்பது தான் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். இந்த நடைமுறையில் தான் உள்ளூர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால், இப்போது எங்கும், எந்தப் பணியிலும், இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்ற தாராளக் கொள்கை காரணமாகவே தமிழகத்தில் உள்ள ரயில்வே துறை பணிகள் வட இந்தியர்களுக்குச் செல்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்.

ரயில்வே துறை கடைநிலைப் பணிகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அனைத்துப் பணிகளும் தகுதி அடிப்படையில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும். இந்தப் பணிகளைப் பெறுவது தமிழர்களின் அடிப்படை உரிமையும் கூட. ஆனால், அவ்வாறு செய்யப்படாதது தான் தமிழர்களுக்கு எதிரான சமூக நீதிப் படுகொலைகளுக்குக் காரணம் ஆகும்.

இனியும் இத்தகைய சமூக அநீதிகள் தொடராமல் தடுக்கவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் வேலை கிடைப்பதை உறுதி செய்யவும் வசதியாக ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் கடைநிலைப் பணிகள் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்," என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.