கடந்த 1868ம் ஆண்டு "கிரேட் சௌதேர்ன் ஆப் இந்தியன் ரயில்வே" நிறுவனத்தால் ஈரோடு - திருச்சி இடையே அகல ரயில் பாதையில் சேவை துவங்கப்பட்டது. ஆனால் அப்போது தமிழகத்தின் பல பகுதிகள் மீட்டர் கேஜ் தடத்தில் இயங்கி வந்த காரணத்தால், மற்ற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தை நீட்டிக்க முடியவில்லை.


இதனையடுத்து 1879ம் ஆண்டு ஈரோடு - திருச்சி ரயில் தடம் அகல ரயில் பாதையில் இருந்து மீட்டர் கேஜ் தடமாக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்றது. பின்னர் 1929ம் ஆண்டு ஈரோடு - திருச்சி தடம் அகல ரயில் பாதையாக மாற்ற "சவுத் இந்தியன் ரயில்வே" நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி 90 வருடங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் 25, 1929ம் ஆண்டு ஈரோடு - திருச்சி தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதுவும் 5 மணி நேரத்தில்....

ஈரோட்டில் இருந்து 1929ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி காலை 6:20க்கு ஒரு மீட்டர் கேஜ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஒவ்வொரு நிலையங்களை கடக்க கடக்க அந்த தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியது. இதற்காக போதிய உபகரணங்களும், பணி ஆட்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அதே சமயம் ஈரோடு ரயில் இருந்து காலை 8:20க்கு அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கியது. இந்த ரயிலில் செல்லும் பணி ஆட்களிடம் அவசரத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

மீட்டர் கேஜ் ரயில் திருச்சி வந்து சேர்ந்த பிறகு சரியாக 5மணி நேர இடைவெளியில் அகல ரயில் பாதையில் துவங்கிய ரயில் திருச்சி வந்து சேர்ந்தது.

ஆனால் தற்போது நவீன உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தும் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு 10 ஆண்டுகள் ஆகிறது...