சென்னை கோட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 915 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 468 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3,500 ரயில்கள், 4,600 முன்பதில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரி 2.30 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, டிக்கெட் இன்றி பயணம் செய்வோரை கட்டுப்படுத்த வாரத்துக்கு 2 நாட்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017-ஆம் ஆண்டு மார்ச் வரை 2.56 கோடி பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், சென்னை கோட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டுமே ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 915 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 468 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.