கோவை ரெயில் நிலைய நடைமேடைகள் அதிக இடைவெளி, உயரத்துடன் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்களில் பயணம் செய்தால் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடையே இருப்பதால் தான் பெரும்பாலானவர்கள் ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவார்கள். இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருந்து பயணிகள் ரெயிலில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
ஆனால் பயணிகளின் எதிர்பார்ப்பிற்கு மாறாக கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 2 நடைமேடைகளுக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சில இடங்களில் ரெயில் பெடடிகளின் படிக்கட்டுகள் நடைமேடையை விட அதிக உயரமாக இருப்பதால் அதில் ஏறுவதற்கு பயணிகள் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற கதையாக சிறிது கால் இடறினாலும் ரெயில் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக பயணிகள் அஞ்சுகிறார்கள்.

இது தொடர்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெயராம் மற்றும் ரெயில் பயணிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை ரெயில் நிலையத்தில் மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. ஒரு பழுது பார்க்கும் நடைமேடை உள்ளது. இதில் 3 மற்றும் 4-வது நடைமேடைகளுக்கும் ரெயில் பெட்டிக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த நடைமேடைகள் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. ரெயில் பெட்டிகளை சரியாக கணக்கிடாமல் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நடைமேடைகளில் இருந்து ரெயில் பெட்டிகளில் ஏறும்போது பயணிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. அஜாக்கிரதையாக ஏறினால் கால்கள் ரெயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொள்ளும். இதை சரி செய்ய ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.