ஆகஸ்ட் 21, 2019

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை மூர் மார்க்கெட் - அரக்கோணம் மற்றும் சென்னை மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில் தினசரி 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயங்கி வருகிறது. அதேப்போல், சென்னை கடற்கரை - வேளச்சேரி தடத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்களும் இயங்கி வருகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், விரைவாக செல்ல முடியும் என்பதாலும் தினமும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அதே வேளையில் ரயில் நிலையங்களில் அடிக்கடி இரவில் மின்வெட்டு ஏற்படுவதால் அதை திருடர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு ரயில் நிலையங்களில் தனியாக நிற்பவர்களிடம் செல்போன் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வருகின்றது.

இதனையடுத்து ரயில் நிலையங்களில் மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்களில் இன்வெர்ட்டர் பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் இன்வெட்டர் பொருத்துவதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, பூங்கா ரயில் நிலையம், சேத்துப்பட்டு, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், வேப்பம்பட்டு, திருத்தணி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, மணலி, வேளச்சேரி, மயிலாப்பூர், தரமணி போன்ற 22 முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக இன்வெட்டர் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.