திருவாரூர் - காரைக்குடி தடத்தில் உள்ள கடவு பாதைகளில் ஆட்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Related image

ஆகஸ்ட் 21, 2019

காரைக்குடி - திருவாரூர் இடையே பயணிகள் ரயில் சேவை கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காரைக்குடி - திருவாரூர் இடையே உள்ள 165 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 8 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்த தடத்தில் இருக்கும் 72 கடவு பாதைகளில் பணி ஆட்கள் இல்லாதது. ஒவ்வொரு முறை ரயில் ஒரு கடவு பாதையை கடக்கும் போதும் ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தி ரயிலில் வரும் மொபைல் கேட் கீப்பர் கேட்டை மூடியும் ரயில் கடந்த பின்னர் கேட்டை திறந்து விடும் பணியை மேற்கொண்டு வருகின்றார். இதனால் ரயிலின் பயண நேரம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த ரயிலில் கழிப்பறை வசதியும் கிடையாது.

இந்நிலையில் இந்த இந்த குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காரைக்குடி ரயில் நிலையம் முன் மறியல் செய்ய முயற்சித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காவல்துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை விரைவில் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் சாத்தையா, ராமச்சந்திரன், குணாளன், நகர துணைச்செயலாளர் ராஜா, ஏஐடியூசி மாநிலக்குழு கண்ணன், கண்டனுார் முத்து, கொரட்டி சாத்தையா, குன்றகுடி ஆறுமுகம், அமராவதி சின்ன ஆதியான், அமைப்புசாரா சங்க சண்முகம், ஒளிஒலி அமைப்பு சங்க சரவணன் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.